மா.சோ.விக்டர்
வேர்ச் சொல், மொழியியல், வரலாற்று ஆய்வாளர்.
வரவேற்பும் எதிர்பார்ப்பும்
திராவிட இயக்க வரலாற்றில், ஒரு மாபெரும் திருப்பம் தற்போது தோன்றியுள்ளது. 1920 களில் நீதிக்கட்சி தோன்றிய பிறகும், 1944 பிறகு, அக்கட்சி திராவிட கழகமாக மாறிய பிறகும், கடந்த ஒரு நூற்றாண்டு அளவில், திராவிட இயக்கத்திற்கு தலைமை தாங்கும் வாய்ப்பு, இதுவரை தமிழருக்குக் கிடைக்கவில்லை. தமிழ் நாட்டில், திராவிடம் என்ற பெயரில் உள்ள இயக்கங்களின் தலைவர்கள் அனைவரும் தமிழர் அல்லாதவர்களே. கோடிக் கணக்கானவர்களை உறுப்பினர்களாகவும், அதே எண்ணிக்கையில், அதன் ஆதரவாளர்களாகவும் கொண்டிருக்கும் அ.இ.அண்ணா தி.மு.க மறைந்த முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்தில், தமிழர் நலன் காக்கப் போராடி வென்றெடுத்தை நாடறியும்.
திராவிட இயக்கங்களில் வலிமையும் ஆற்றலும் பெரியதுமான அக்கட்சியில் ஆட்சி பொறுப்பும், கட்சி தலைமை பொறுப்பும் இன்று, தமிழர்களின் தட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. ஒரு நூற்றாண்டுக் காலம்,தமிழர்கள், தலைமைப்பொறுப்புக்கு வர முடியாத சூழலில், இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு ஓ. பன்னீர்செல்வம் அவர்களை, தமிழ் உணர்வாளர்களும், உலகத்தமிழர்களும் மகிழ்ந்து வரவேற்கின்றனர். திராவிடர் கட்சி ஆட்சியில், தமிழர் ஒருவர் முதன்முறையாக சிக்கல் இன்றி முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.
அந்த இயக்கத்தின் தொண்டர்கள் முதல் அமைச்சர்கள் வரை, கட்சியின் ஒவ்வொரு பொறுப்பாளரைப் பற்றி நன்கு அறிந்தவர்,35 ஆண்டுகளாக மறைந்த முதலமைச்சர் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசியல் பாடங்களைக் கற்றுத் தெரிந்தவரான அவரது தோழியர் திருமதி. சசிகலா நடராசன் அவர்கள், கட்சியின் பொதுச்செயலாளாராகப் பொறுப்பேற்பதே சாலச் சிறந்ததாகும். அ.இ.அண்ணா திமுக.வின் தொண்டர்களும் பொறுப்பாளர்களும் அக்கருத்தையே கொண்டிருக்கிறார்கள் என்பதால், கட்சி நிர்வாகப் பொறுப்பை, அம்மையார் ஏற்றுச் செயல்படுவதே, அக்கட்சிக்கும், தமிழ் மக்களுக்கும் நலம் பயக்கும்.
தமிழகத்தின் அரசியல் கட்சித்தலைவர்களான திரு. மருத்துவர் . இராமதாசு, திரு. தொல் திருமாவளவன், திரு. மருத்துவர் கிருஷ்ணசாமி, திரு.தா.பாண்டியன் உள்ளிட்ட தமிழர்கள், தங்கள் மாறுபாடுகளைக் களைந்து, மாண்புமிகு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு நல்லாதரவினை வழங்க முன்வரவேண்டும். தமிழ்ச் சமூகம் அதனையே எதிர்பார்க்கிறது. தமிழ்நாட்டில் இனிவரும் காலங்களில், தமிழனின் ஆட்சியே தொடரவேண்டும். தமிழ்ப் பகைவரை வென்றெடுத்து, தமிழ்நாட்டை முன்னேற்ற, தமிழ்த் தலைவவர்கள் முன்வரவேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழனின் எதிர்பார்ப்பு. தமிழ்மொழி, தமிழர் இனம் என்றவாறு ஒன்றுபடுவோம், வென்றெடுப்போம்.